Congress party leader Mallikarjun Kharge Rajya Sabha
இந்தியா

கார்கேவுக்கு எதிராக தீண்டாமை கொடுமை.. கங்கை நீரால் சுத்திகரிக்கப்பட்ட இடம்.. சாதிதான் காரணமா?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே தீண்டாமை கொடுமை நடந்துள்ளது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி உத்தராகண்ட்டின் ஹல்திவானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கு வந்த ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கங்கை நீரைக் கொண்டு அந்த இடத்தை சுத்திகரிப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் (Ganesh Godiyal), மல்லிகார்ஜுன கார்கே பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான், பாஜகவுடன் தொடர்புடைய இந்து அமைப்பு இதுபோன்ற செயலைச் செய்ததாகவும், சாதியின் பெயரால் சமூகத்தில் பிளவுகளை பாஜக உருவாக்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்துப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ”நான் ஒரு பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் என்னைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் யாரிடமும் ஒருபோதும் கூறியதும் இல்லை, கெஞ்சியதும் இல்லை. என்னிடம் போராடும் வலிமை எனக்கு இருக்கிறது” கூறினார்.

மேலும், “அதே நேரம் ஹல்த்வானியில் நான் நின்ற மேடையைச் சுத்தம் செய்ததன் மூலம், எனக்கு தீண்டாமையின் உணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், நான் அவமதிக்கப்பட்டேன்” என்று பேசிய அவர், ”இந்த செயலை செய்தவர்களை தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, இது போன்ற சம்பவங்களை பாஜக ஆதரிப்பதில்லை என்றும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய மாநிலங்களவை தலைவரான துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கார்கே அவமதிக்கப்பட்டது நம் அனைவருக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என்றும், தீண்டாமை ஒரு பாவச்செயல் என்பதால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.