1984-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லண்டனைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் இந்தியாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாக காரணமான சீக்கிய கலவரம் பற்றி அவர் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘யாருக்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது தவறு என்பதே என் கருத்து. சீக்கிய கலவரம் தொடர்பான சட்ட நடைமுறைகள் நடந்து வருகிறது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும். இதை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். சீக்கிய கலவரம், வலிமிகுந்த துயரம் என்பதில் எனக்கு எந்தவித குழப்பமும் இல்லை. அது நிச்சயம் வன்முறை தான். இதில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அதை ஏற்கமாட்டேன்’ என்றார்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.