இந்தியா

பாஜக பெண் வேட்பாளரை பாலியல் ரீதியாக தரக்குறைவாக பேசிய கமல் நாத்..!

JustinDurai
பெண்களை மதிக்காத வரலாறு காங்கிரசுக்கு உண்டு என்று குற்றஞ்சாட்டியுள்ளார் ஜோதிராதித்யா சிந்தியா.
 
மத்தியப்பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
 
தப்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சுரேஷ் ராஜே என்பவரை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்டி தேவி என்பவரை பாலியல் ரீதியாக தரக்குறைவாக பேசினார் கமல் நாத். அது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, பெண்களை மதிக்காத வரலாறு காங்கிரசுக்கு உள்ளது என்று காட்டமாக கூறினார்.
 
ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், "இதுதான் காங்கிரஸின் கொள்கை. முதலில், திக்விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜனைப் பற்றி ஒரு விஷயம் சொன்னார். அது இப்போது எனது நினைவில் இல்லை. இப்போது கமல்நாத் பாஜகவின் இமார்டி தேவியை தரக்குறைவாக  பேசியுள்ளார். அஜய் சிங் அவரை 'ஜலேபி' என்று அழைக்கிறார். காங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதிப்பதில்லை" என்றார்.
 
கமல் நாத்தின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த இமார்டி தேவி, "இதுபோன்றவர்களுக்கு மத்திய பிரதேசத்தில் தங்குவதற்கு உரிமை இல்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரை கட்சியில் இருந்து நீக்குமாறு நான் கோருகிறேன். அவரும் ஒரு பெண் மற்றும் தாய். அவரது மகளை பற்றி யாராவது இப்படி கூறினால் அவர் பொறுத்துக்கொள்வாரா?’’ என்றார்.