Kiren Rijiju web
இந்தியா

”சபாநாயகர் அறைக்குள் நுழைந்த காங்கிரஸ் எம்.பிக்கள்” - வீடியோ வெளியிட்ட கிரண் ரிஜிஜு!

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் காங்கிரஸ் எம்.பி.க்கள், பாஜக அமைச்சர்களுடன் வாக்குவாதம் செய்வது தொடர்பான காணொளியை அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

PT WEB

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சீன ஆக்கிரமிப்பு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே, குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்த போது , பிப். 4 அன்று தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. இதற்கு, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

PM modi, om birla

இதையடுத்து, பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது சர்ச்சையை எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இருக்கையை எதிர்க்கட்சி பெண் எம்.பி-க்கள் முற்றுகையிடுவது தொடர்பான காணொளியை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தான் இன்று, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சபாநாயகரின் அறைக்குள் அனுமதியின்றி நுழைவது தொடர்பான காணொளியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோ குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதில், " இந்தக் காணொளி, 20 - 25 காங்கிரஸ் எம்.பி.க்கள், அவைத்தலைவரின் அறைக்குள் நுழைந்து, அவரை திட்டியதுடன் பிரதமரை மிரட்டியபோது ​​ சட்டவிரோதமாக ஒரு காங்கிரஸ் எம்.பி எடுத்த வீடியோ. எங்கள் கட்சி விவாதம், உரையாடலில் நம்பிக்கை கொண்டுள்ளது. எம்.பி.க்கள் அச்சுறுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

கிரண் ரிஜிஜு

ஏற்கனவே, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, "சபாநாயகர் அறைக்குள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 முதல் 25 எம்.பி.க்கள் நுழைந்து, அவரிடம் முறையற்றவாறு நடந்து கொண்டனர். நானும் அங்குதான் இருந்தேன். பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர். அவைத் தலைவர் மிகவும் மென்மையான மனிதர். இல்லையெனில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். எதிர்க்கட்சியினரால் சபாநாயகர் ஓம் பிர்லா வேதனையடைந்துள்ளார்" எனத் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் விவகாரம் குறித்து அமைச்சர் ரிஜிஜூ வெளியிட்டிருக்கும் காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.