இந்தியா

"வெளிப்படைத்தன்மை இருக்கட்டும், வணக்கம்!" - PM CARES சர்ச்சையில் தங்கிலீஷில் ராகுல் தாக்கு

EllusamyKarthik

'பி.எம். கேர்ஸ்' விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, 'வணக்கம்' என்று தங்கிலீஷில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா பரவலை எதிர்கொள்ள `பிஎம் கேர்ஸ்’ நிதியம் உருவாக்கப்பட்டு பொதுமக்கள், நிறுவனங்களிடம் நன்கொடை பெறப்பட்டு வருகிறது. `பிஎம் கேர்ஸ்’ நிதியம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நிதியம் தொடங்கப்பட்ட 5 நாட்களில் ரூ.3,076 கோடி நன்கொடையாக பெறப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த அமைப்பே இந்த தகவலை வெளியிட்டது. ஆனால் யார் யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்று தகவலை மட்டும் வெளியிடவில்லை. 

ஆர்.டி.ஐ மூலம் கேட்டும், காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாக கேள்வி எழுப்பியும் தணிக்கை தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் பிஎம் கேர்ஸ் தொடர்பாக தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே, 27 நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் PM CARES விளம்பரப்படுத்தப்பட்டு நன்கொடை பெறப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன் மற்றும் பாகிஸ்தான் போன்ற பல முக்கிய நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டு நன்கொடைகள் பெறப்பட்டதாகவும் அதற்கு பதிலாக சர்வதேச நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் தொடங்க சலுகைகள் கொடுக்கப்பட்டதாகவும் சந்தேகங்கள் எழுப்பி செய்தி வெளியானது.

இதோடு, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ``வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் PM CARES-க்கு நன்கொடை வாங்கப்படுகிறது. அதிலும் சீனா, பாகிஸ்தான், கத்தார் போன்ற நாடுகளில் இருந்து நன்கொடை வாங்குவது புதிராக இருக்கிறது" என்று பிரதமருக்கு நான்கு கேள்விகள் எழுப்பியிருந்தார். 

இந்தியத் தூதரகங்கள் ஏன் விளம்பரம் செய்து, நிதி திரட்டுகின்றன. தடை செய்யப்பட்ட சீனச் செயலிகளால் ஏன் பிஎம் கேர்ஸ் குறித்து விளம்பரம் செய்யப்படுகிறது? பாகிஸ்தானிலிருந்து எவ்வளவு பணம் நிதியாகப் பெறப்பட்டது, யார் நன்கொடை கொடுத்தார்கள்? கத்தார் நாட்டில் எந்த இரு நிறுவனங்கள் எத்தனை கோடிகள் நன்கொடையாக கொடுத்தன" என்று கேட்டிருந்தார். 

இதேபோல் ராகுல் காந்தியும் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``வெளிப்படைத்தன்மை இருக்கட்டும், வணக்கம்" என்று குறிப்பிட்டு இதுதொடர்பான செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார். 

அந்த செய்தியில், "PM CARES தனியார் அறக்கட்டளையா அல்லது அரசின் அறக்கட்டளையா என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. அரசு நிறுவனங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்படுகிறது. ஆனால் ஆவணங்களில் பெறப்படும் நிதி தனியார் நிதி எனத் தெரிவிக்கப்பட்டு, ஆர்டிஐ விலக்குபெற்றுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் PM CARES கூடுதல் சர்ச்சைகளை சந்தித்துள்ளது.