இந்தியா

மோடி படத்தைக் கிழித்த வழக்கில் குஜராத் காங். எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம்!

PT WEB

பிரதமர் நரேந்திர மோடி படத்தைக் கிழித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, அவரது மேசையில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் படேல் என்பவருக்கு ரூ.99 அபராதம் விதித்துள்ளது குஜராத் நீதிமன்றம். இந்த வழக்கில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி.ஏ.தாதால் தீர்ப்பளித்துள்ளார். சட்டப்பிரிவு 447-ன்கீழ் குற்றவியல் அத்துமீறல் என்ற வகையில் எம்.எல்.ஏ அனந்த் படேலின் செயல் குற்றமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அனந்த் படேலுடன் சேர்த்து, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் உட்பட மேலும் ஆறு பேர் பேர் மீது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் மீது சட்டப்பிரிவு 143 (சட்டவிரோதமான கூட்டம்), 353 (தாக்குதல்), 427 (ரூ. 50க்கு மேல் இழப்பு ஏற்படுத்திய இழப்பு), 447 (குற்றம் சார்ந்த அத்துமீறல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜலால்பூர் காவல்துறையால் மே 2017இல் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இதில் 7 பேரில் 3 பேர் குற்றவாளிகளாக அறியப்பட்டு, அவர்களுக்கு ரூ.99 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை கட்டவில்லையெனில், 7 நாள்கள் எளிமையான சிறைத்தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.