உயிரிழந்த ஷரணப்பா
உயிரிழந்த ஷரணப்பா PT WEB
இந்தியா

கர்நாடகா | Whats App-ல் வந்த குறுச்செய்தி... காங். பிரமுகரைக் கொலை செய்த மர்ம கும்பல்!

webteam

கர்நாடகாவின் கதக் மாவட்டம் ரோன் தோனி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷரணப்பா சண்டிகவுடர் (40). இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் அப்டேட்டாக இருந்து வந்துள்ளார். அவ்வபோது காங்கிரஸ் திட்டங்களைக் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ரோன் தோனி கிராமத்துக்கு அருகிலுள்ள டம்பளா என்ற கிராமத்தில் உள்ள துர்காமம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த ஷரணப்பா, தனது இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

ஷரணப்பா

அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று, ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பகுதியில் அவரை வழி மறித்து முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் கை, கால்களைக் கயிற்றில் கட்டி சடலத்தை மரத்தில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர்.

பின்னர் உயிரிழந்த ஷரணப்பாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஷரணப்பா எப்போதும் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வதில் மும்முரமாக இருப்பார் என்பதும், தற்போது மனைவியைவிட்டு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இவருக்கு வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் கொலை மிரட்டல் குறுஞ்செய்தி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், அதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். அவரின் சகோதரி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்குமாறு அறிவுறுத்திய போதும் அதை அவர் பொறுப்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.