நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணம் அனைத்து கட்சிகளிடமும் இருக்கிறது, தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் கூட தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரசும் , பாஜகவும் அதற்கான பரப்புரையை தொடங்கி விட்டன. கட்சி அளவில் மாநில தலைவர்களை சந்திப்பதையும் , தொண்டர்களிடம் கருத்து கேட்பதையும் ஆரம்பித்துள்ளனர். பாஜக தலைவர் அமித்ஷா தமிழகம் வந்தபோது வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள வரை சந்திப்பு நிகழ்த்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி பேசுகையில் “ உரிய இடங்களை காங்கிரஸ்கட்சி கொடுத்தால் அவர்களோடு இணைந்து தேர்தலை சந்திக்க தயார்” என கூறியிருந்தார். பாஜக அல்லாத ஆட்சியே மத்தியில் அமைய வேண்டுமென மமதா பானர்ஜியும் ஒரு பக்கம் சந்திப்பு நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில் அதனை சாதகமாக்கிக் கொள்ள காங்கிரஸ் உத்திகளை வகுத்து வருகிறது. அதற்கான வாய்ப்புகளையும், மாநில அளவில் ஏற்படுத்த வேண்டிய கூட்டணி குறித்தும் அதிக அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. அங்கு விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த தலைவர் ஒருவர் “ராகுல் காந்தி தேர்தலில் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிடுவதை விரும்பவில்லை, கூட்டணி ஆட்சியே அமைய வாய்ப்புள்ளது என நம்புவதால் மாநில கட்சிகளின் தலைவர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவெடுத்துள்ளார் என கூறினார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி அல்லது மாயாவதி அல்லது முலாயம் அல்லது தென்னிந்திய தலைவர்களும் கூட இதற்கான பரிசீலனையில் இருக்கிறார்கள் என்றும் அதே நேரத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இருவரை முன்னிறுத்துதல் சரி என அவர் நம்புகிறார் என்றும் கூறினார். மேலும் கூட்டணி கட்சிகள் விரும்பும் பட்சத்தில் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து வேட்பாளரை முடிவு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.
காங்கிரஸ் தலைவரின் இந்த யோசனை ஒருவகையில் ஏற்க கூடியது என்றாலும் இதில் சில காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. ராகுல் தலைமையில் தேர்தலை சந்திக்க வரும் கட்சிகளுக்கு முக்கிய துறைகள் கொடுக்கப்படும் என்ற உறுதியோடு வேண்டுமானால் தேர்தல் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தும் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ராகுல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் வேட்பாளர் என்ற கொள்கையில் கூட்டணி பேச்சை ஆரம்பியுங்கள் என கூறியிருப்பதாக தெரிகிறது.