இந்தியா

தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்

தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்

Rasus

உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாட்டில் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும்படி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேரைத் தொடர்ந்து 27 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்டோரை தொடர்ந்து இணைநோய் உள்ள 50 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணிகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தபிறகு பேசிய மோடி, ‘’சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எழுந்த எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது. இந்தியாவில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை, வதந்திகளை நம்பவேண்டாம். தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவுடன் முகக்கவசங்களை நீக்கிவிட வேண்டாம்’’ என்றார்.

எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தடுப்பூசி தொடர்பாக சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், ``பல புகழ்பெற்ற மருத்துவர்கள் கோவாக்சினின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதே மருத்துவர்கள் மக்கள் எந்த தடுப்பூசியை எடுக்க விரும்புகிறார்கள் என்பதை மக்கள் தேர்வு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளனர்.

தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது மற்றும் தடுப்பூசியின் செயல்திறன் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றும் கூறுகிறீர்கள். அப்படி என்றால், உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் நிகழ்ந்ததைப் போலவே இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் ஒருவர் கூட தடுப்பூசி போட முன்வரவில்லை. அது ஏன்?.

கோவாக்சின் அவசரகால பயன்பாட்டிற்காக அரசாங்கத்தால் உரிமம் பெற்றது. இப்போது அரசாங்கம் மக்களுக்கு எந்த தடுப்பூசியைத் தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை கொடுக்கவில்லை. கோவாக்சினின் 3 ஆம் கட்ட சோதனைகள் நிறைவடையாதபோது, அதன் செயல்திறன் குறித்து இது பல்வேறு கவலைகளை எழுப்புகிறது" எனக் கூறியுள்ளார்

இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளித்துள்ளார். ``இரட்சிக்கப்படுவதைக் காட்டிலும் நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம் என்று நம்முடைய உணர்வுகளால் நாம் கண்மூடித்தனமாக இருக்கிறோம்" என்ற மதகுரு சார்லஸ் காலேப் கால்டன் வரிகளை சுட்டிக்காட்டி, ``மணீஷ் திவாரி மற்றும் காங்கிரஸ் அவநம்பிக்கை மற்றும் வதந்திகளைப் பரப்புவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர். கண்களை திறந்து பாருங்கள். புகழ்பெற்ற டாக்டர்கள் மற்றும் அரசு செயல்பாட்டாளர்கள் தடுப்பூசி போடப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு தடுப்பூசியின் செயல்பாடுகளை விரைவுபடுத்த எங்கள் விஞ்ஞானிகள் மின்னல் வேகத்தில் பணியாற்றியுள்ளனர். ஆனால் இதில் ஒரு செயல்பாடு கூட மீறப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பு வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.