இந்தியா

காங்கிரஸ் எம்பிக்கள் மீது காவல்துறை தாக்குதல் - சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார்

Sinekadhara

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தின்போது அவர்கள் டெல்லி காவல்துறையினரால் கடுமையாக நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிராக கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேரணி நடத்துவதற்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அதனை மீறி பேரணி மற்றும் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக கைதுசெய்து வருகின்றனர். 

இந்த நடவடிக்கைகளின்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடுமையாக காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், அதி ரஞ்சன் சவுதரி, ப சிதம்பரம் உள்ளிட்ட பலருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே டெல்லி காவல் நிலையங்களில் அக்கட்சி சார்பில் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிரஞ்சன் சவுதரி தலைமையில் மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார் செல்லகுமார், விஜய் வசந்த் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர். உரிய அனுமதி இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கினர். குறிப்பாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டது உள்ளிட்டவை குறித்து மக்களவை சபாநாயகரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

இதற்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அதிரஞ்சன் சவுதரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து காங்கிரஸ் தலைவர்களை தாக்கிய காவல்துறையினர், இதனை திட்டமிட்டே செய்து இருக்கிறார்கள் என்றும், மத்திய அரசு பழி வாங்கக்கூடிய வன்முறை அரசியலை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.