ManmohanSingh pt web
இந்தியா

“வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் நிரூபித்தார்” மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

PT WEB

எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், தன்னுடைய வழிகாட்டியை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தின் மீதான மன்மோகன் சிங்கின் புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, தானும், அவரது லட்சக்கணக்கான ஆதரவாளர்களும் சேர்ந்து அவரை என்றும் நினைவுகூர்வோம் என பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், மன்மோகன் சிங்கின் மறைவால், ஒரு தலைச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். வார்த்தைகளால் அல்லாமல் தனது செயல்களால் மன்மோகன் சிங் தன்னை நிரூபித்துக்காட்டியதாக தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்தார்.

இதேபோல், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், மன்மோகன் சிங்கைப் போன்ற அரசியல் தலைவரைப் பார்ப்பது மிகவும் அரிது என்றும், அவரது நேர்மை என்றும் நமக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் எதிரிகளின் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியிலும் நாட்டிற்கு சேவை செய்யும் உறுதிப்பாட்டுடன் பணியாற்றிய மன்மோகன் சிங் என்றும் சிறந்த தலைவராக நமது மனதில் நீடித்திருப்பார் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட பதிவில், 1991 முதல் 2014 வரையிலான மன்மோகன் சிங்கின் பொது வாழ்க்கை காலம், இந்திய வரலாற்றின் பொற்காலமாக விளங்கியதாகவும், மன்மோகன் சிங்கைப் போல் மிகுந்த தன்னடக்கத்துடன் இருக்கும் நபரை இதுவரை பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங்கின் கதை முற்றிலும் வெளிவரவில்லை என்று தெரிவித்த ப.சிதம்பரம், அவரது 23 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் தான், அவரது பங்களிப்புகளை நம்மால் உணரமுடியும் எனக்கூறினார்.