அதானி, மோடி, ராகுல்
அதானி, மோடி, ராகுல் twitter and ani
இந்தியா

”அந்த பணமெல்லாம் யாருடையது” - OCCRP அமைப்பு வெளியிட்ட அறிக்கை.. அதானி குழுமத்திற்கு புதிய சிக்கல்!

Prakash J

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனால் அதானி குழுமப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியடைந்து தற்போது அதிலிருந்து மீண்டெழுந்து வருகின்றன. இந்த நிலையில், OCCRP எனும் அமைப்பு, மொரிஷியஸ் நாட்டு நிறுவனங்கள் வாயிலாக மறைமுக நிதியை பயன்படுத்தி இருவர், அதானி குழுமப் பங்குகளை சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு வாங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது.

நாசர் அலி ஷபான் அலி மற்றும் சாங் சுங்-லிங் ஆகிய இருவரும், அதானி குடும்பத்துடன் நீண்டகால வணிகத் தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள் இருவரும் கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் நிறுவனங்களில் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக அதானி குழுமப் நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் மூலம் வாங்கி, விற்று லாபம் பார்த்துள்ளனர் என அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது? பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காது ஏன்?

ராகுல் காந்தி

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். அதானியின் பணம் யாருடையது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்? நாட்டின் பொருளாதாரம் மற்றும் வணிகம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிகாட்டியுள்ளது. அதானியால் இந்தியாவில் உள்ள எதையும் எளிதாக வாங்க முடியும்; இது எப்படி” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.