குஜராத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, அதீத வெப்பத்தின் காரணமாக அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சோர்வடைந்த ப.சிதம்பரம், அவசர ஊர்தி மூலம் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 நாள்கள் காங்கிரஸ் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நீர்சத்து குறைவு காரணமாக தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார். முதல்வர் ஸ்டாலினும் ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக கூறியுள்ளார். இச்சூழலில் தான் நலமாக உள்ளதாக ப.சிதம்பரம் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.