இந்தியா

விமான நிலைய அடையாள மையால் கையில் அலர்ஜி - காங்கிரஸ் தலைவர் மது யாஸ்கி புகார்

Sinekadhara

ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான மது கௌடு யாஸ்கி, வெளிநாட்டிலிருந்து வந்தபோது டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் அவருடைய கையில் அடையாளம் போடப்பட்ட மையால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஹைதராபாத்தின் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், செய்தி தொடர்பாளருமான மது யாஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில், மத்திய வான்வெளித்துறை போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரியை டேக் செய்து, தனது கையில் ஒவ்வாமை ஏற்பட்டதை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் கையில் அடையாளம் போட பயன்படுத்தும் மையில் கலந்துள்ள ரசாயனம் குறித்து கவனிக்கும்படி அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஹர்தீப், ’’என்னுடைய பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு நன்றி. இதுகுறித்து இந்திய விமான நிலைய தலைவரிடம் பேசியிருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அதற்கு மது, ‘’உரிய நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி. இதுபோல் மற்ற பயணிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, டெல்லி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் அதற்கு பதிலளித்துள்ளது. ‘’தவறுக்கு மிகவும் வருந்துகிறோம். ஸ்டாம்ப் செய்வதற்கு நீண்ட நாட்களுக்கு அழியாத மையை பயன்படுத்துகிறோம். இதுகுறித்து, டெல்லி மாநில அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம். தற்போதுள்ள மையை சோதனைக்கு அனுப்பி, அப்புறப்படுத்தி உள்ளோம். இந்த பிரச்னையை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி’’ எனக் கூறியுள்ளது.