அனில் அந்தோணி
அனில் அந்தோணி ANI twitter page
இந்தியா

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரின் மகன்! தேசிய அரசியலில் பரபரப்பு.. பின்னணி என்ன?

Prakash J

கேரளாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி, காங்கிரஸின் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். தவிர, கேரள மாநிலத்தின் காங்கிரஸின் முகமாகவும் அறியப்படுபவர் ஏ.கே.அந்தோணி. தனக்கு வயதானதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏ.கே.அந்தோணி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அந்தச் சமயத்தில், மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் கேரளா முழுவதும் திரையிடப்படும் என அம்மாநில காங்கிரஸ் கட்சி கூறி இருந்தது. இதற்கு எதிரான கருத்தை ஏ.கே.அந்தோணியின் மகனான அனில் அந்தோணி தெரிவித்திருந்தார்.

அனில் அந்தோணி

”பாஜகவுடன் பெரிய அளவில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், இந்தியாவுக்கு எதிரான; பாரபட்சத்துடன் செயல்படக்கூடிய; இங்கிலாந்து அரசின் ஆதரவைப் பெற்ற ஒரு தொலைக்காட்சியின் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பார்வையை அப்படியே முன் வைப்பது நமது இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும்” என கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

இது, கேரள அரசியலில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே புயலைக் கிளப்பியது. அத்துடன், அனில் அந்தோணி சொன்ன கருத்தும் காங்கிரஸுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, மறுநாளே (ஜனவரி 25) அனில் அந்தோணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதுகுறித்து அன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் கட்சியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். கருத்துச் சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் எனது ட்வீட்டை திரும்பப் பெறும்படி கூறினர்.

நான் மறுத்துவிட்டேன். அன்பு பரப்பப்படுவதை ஆதரிப்பவர்களின் முகநூல் பக்கங்கள் வெறுப்பும் துஷ்பிரயேகமுமாக இருக்கிறது. இதற்குப் பெயர் பாசங்கு. வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்" எனப் பதிவிட்டிருந்ததுடன், தன்னுடைய ராஜினமா கடிதத்தையும் அத்துடன் இணைத்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸிலிருந்து விலகிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அனில் அந்தோணி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்தது குறித்து அனில் அந்தோணி, “பாஜக இன்றுடன் 44வது வருடத்தைக் கொண்டாடி மகிழ்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நான் பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம், தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு குடும்பத்திற்காக உழைப்பதுதான் அவர்களுடைய கடமை என்று நம்புகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நாட்டிற்காக உழைப்பதுதான் என்னுடைய கடமை என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அனில் அந்தோணி பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார். பாஜகவில் அனில் அந்தோணி இணைந்திருப்பது கேரள அரசியலில் மட்டுமல்லாது இந்திய காங்கிரஸிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.