tomato
tomato ptweb
இந்தியா

என்னப்பா இப்படி தக்காளி விலை எகிறிப்போச்சு! பிரீஃப்கேஸ், துப்பாக்கியுடன் காங். நூதன போராட்டம்!

PT WEB

இந்தியாவில் தக்காளியின் விலை ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே சராசரியாக 85-90% வரை உயர்ந்துள்ளது. பல இடங்களில் ஜூன் 1 ஆம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.22க்கு விற்கப்பட்ட நிலையில் ஜூன் 27 ஆம் தேதியன்று ஒரு கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டது.

#JUSTIN | ரேஷனில் இன்று முதல் தக்காளி விற்பனை

டெல்லியில் ஜூன் 15 ஆம் தேதியன்று ரூ.30க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.80க்கு விற்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் ரூ.110க்கும், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தில் ரூ.120 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. தக்காளியின் விலையை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது என்றும் அதனால் விலை உயர்ந்து காணப்படுகிறது என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார், கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. உலகளவில் தக்காளி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு 20 மில்லியன் டன்னுக்கும் மேலாக தக்காளி பயிரிடப்பட்டதாக தோட்டக்கலை வாரியம் மதிப்பிட்டிருக்கிறது.

tomato, periyakaruppan

தமிழ்நாட்டை பொறுத்தவரை தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் விலை நிலைப்படுத்தும் நிதியம் மூலம் தக்காளியின் விலையை குறைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “பண்ணை பசுமைக் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமைக் கடைகள் மூலம் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் தக்காளி பயிரிடப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து அங்கு கொள்முதல் செய்து, விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னையில் முதல்கட்டமாக 82 நியாய விலைக்கடைகளில் ரூ.60க்கு தக்காளி விற்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தக்காளி விலை ஏற்றத்திற்கு எதிராக நூதன போராட்டத்தை நடத்தியது. காங்கிரஸ் கட்சியினர் போபாலின் 5-ம் எண் சந்தைக்கு காய்கறிகளை வாங்குவதற்காக பிரீஃப்கேஸ் மற்றும் போலி துப்பாக்கியுடன் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியினர், தக்காளியின் விலை அதிகமாக இருப்பதால் காய்கறிகளை பிரீஃப்கேஸ் மற்றும் துப்பாக்கியுடன் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

tomato, madhyapradesh

மாநிலத்தில் உள்ள பாஜக அரசை கடுமையாக சாடிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விக்கி கொங்கல், "காங்கிரஸ் ஆட்சியின் போது பணவீக்கம் "தயான்" (சூனியக்காரி) என்று அழைக்கப்பட்டது, ஆனால் இப்போது அது பாஜக ஆட்சியில் "டார்லிங்" ஆகிவிட்டது" என்றார்.

tomato

பின்னர் காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் வாங்கிய காய்கறிகளை கட்சி அலுவலகத்தில் உள்ள லாக்கரில் வைத்தனர்.