புது டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா AI உச்சி மாநாட்டின் போது காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர்கள் சட்டை அணியாமல் போராட்டம் நடத்தியதை, பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லியில் நடந்த சர்வதேச நிகழ்வான இந்தியா AI இம்பாக்ட் உச்சிமாநாட்டில் காங்கிரஸ் நடத்திய போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மீரட்டில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி எவ்வளவு சித்தாந்த ரீதியாக திவாலாகியுள்ளது என்பதைக் காங்கிரசின் இளைஞர் அணி நடத்திய சட்டையில்லா போராட்டம் காட்டுகிறது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். உலகளாவிய நிகழ்வை காங்கிரஸ் அதன் அழுக்கு மற்றும் அப்பட்டமான அரசியலுக்கான தளமாக மாற்றியது என்றும், ஏற்கனவே நீங்கள் நிர்வாணமாக இருக்கிறீர்கள், பிறகு ஏன் உங்கள் ஆடைகளைக் கழற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது? என்றும் காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளார் பிரதமர் மோடி.
காங்கிரஸ் தனது சொந்த நாட்டை அவமதிக்கிறது. நாட்டிற்குள் இருக்கும் சில அரசியல் கட்சிகளால் இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியாவில் சமீபத்தில்தான் கண்டோம். ஆனால் காங்கிரஸ் என்ன செய்தது? இந்தியாவில் நடந்த ஒரு உலகளாவிய நிகழ்வை காங்கிரஸ் அதன் அப்பட்டமான அரசியலுக்கான தளமாக மாற்றியது.
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு ’பாஜகவின் நிகழ்வு அல்ல’ என்பதை காங்கிரஸ் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் மீரட்டில் நடந்த கூட்டத்தில் பிரதமர் உரையாற்றியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர்கள் என்னை வெறுக்கிறார்கள், என் அம்மாவை அவமதிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை என்றும் கூறியுள்ளார்.
AI உச்சி மாநாட்டில், வெள்ளிகிழமை காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் சட்டை அணியாமல் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட்டதற்காக மோடி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.