இந்தியா

'டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும்' - காங்கிரஸ் கடும் சீற்றம்

JustinDurai

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

டெல்லியில் மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் 14 மணி நேரம் நடந்த இந்த சோதனை மாலை நிறைவடைந்தது. இந்த சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து மணீஷ் சிசோடியா, டெல்லி கலால் துறை அதிகாரிகள், மதுபான நிறுவன நிர்வாகிகள், டீலர்கள், ஊழியர்கள் உள்பட 15 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். சிபிஐ சோதனை நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, ''நாங்கள் எந்த ஊழலோ, தவறோ செய்யவில்லை. நாங்கள் பயப்படவில்லை. சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும்'' என்று கூறினார்.

டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், மணீஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அல்கா லம்பா மற்றும் அபிஷேக் தத் ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

மத்திய அரசால் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சிபிஐ சோதனைக்கு உள்ளான டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: டெல்லி துணை முதல்வர் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை -அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்