பிரியங்கா காந்தி Pt web
இந்தியா

பிரியங்காவை காங். தலைவராக்க ஆதரவாளர்கள் விருப்பம்.. மூத்த தலைவர்கள் எண்ணம் என்ன?

காங்கிரஸ் காரிய கமிட்டி வரும் சனிக்கிழமை கூடும் நிலையில், பிரியங்கா காந்தியை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து வருவது, கட்சிக்குள் விவாதத்தை கிளப்பியுள்ளது.

PT WEB

பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவராக வரவேண்டும் என ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். இம்ரான் மசூத், முகமது முகிம் உள்ளிட்டோர் அவரை ஆதரிக்கின்றனர். ஆனால், மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியுடன் போட்டியாக பிரியங்கா வருவதில் குழப்பத்துடன் இருக்கிறார்கள். இதனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரியங்கா தலைமை குறித்து பேசப்படுமா என எதிர்பார்ப்பு உள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், சமீபத்தில் பிரியங்கா காந்தி சிறந்த பிரதமராக செயல்படுவார், அவர் இந்திரா காந்தி போன்று செயல்படுகிறார் என்று பேசியது, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எதிரொலிக்குமா என கட்சியின் தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஏற்கனவே ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் முகமது முகிம், கட்சியின் தலைவராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்க வேண்டும் என கட்சி தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி

இதேபோன்று, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்கடி, மக்களவை உறுப்பினர் பூபீந்தர் ஹூடா உள்ளிட்டோர், பிரியங்கா காந்தி சிறந்த தலைவராக செயல்படுவார் என பேசி வருவதையும் காங்கிரஸ் தலைவர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர்.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுக்கு பின் சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் முதல் வரிசையில் அமர்ந்து பிரியங்கா காந்தி தேநீர் அருந்தியது கவனத்தை ஈர்த்தது.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, வயது முதிர்வால் உடல் நலக்குறைவுகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால், 83 வயதாகும் அவர், தனது பதவிக்காலமான 2027 அக்டோபர் மாதம் வரை தலைவராக தொடர்வாரா என்கிற கேள்வி, காங்கிரஸ் தலைவர்களிடையே உள்ளது. இதனால்தான் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே

அதேநேரம், பிரியங்கா தற்போதைய சூழலில் ராகுலுக்கு போட்டியாக தன்னை கருதுவதை விரும்ப மாட்டார் என கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். சோனியா காந்தியும் அத்தகைய சூழலை விரும்பவில்லை என்பது அவர்களது ஆணித்தரமான கருத்து. கட்சியில் ராகுல் முகாம், பிரியங்கா முகாம், சோனியா முகாம், கார்கே முகாம் என பிளவுகள் ஏற்பட்டால், காங்கிரஸ் மேலும் பலவீனமடையும் என்றும் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் சனிக்கிழமை கூடும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் யாரேனும் பிரியங்கா காந்தி தலைமை ஏற்பது குறித்து பேசுவார்களா என்பது உற்றுநோக்கப்படுகிறது.