பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 9 ஆம் தேதி வரை கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் பிரேசிலில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் மிக நீண்ட வெளிநாட்டுப் பயணம் இது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் இரண்டாவது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணம் இது. இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் என ஆறு நாடுகளுக்கான 8 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கானா நாட்டிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார். பிரதமரின் கானா பயணம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், “கானா அதிபரைச் சந்தித்து, இருநாட்டு உறவுகளைப் பரிசீலிக்கவுள்ளதுடன், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமரின் இந்த நீண்ட வெளிநாட்டு பயணத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “கடினமான சூழ்நிலை ஏற்படும் போது, தங்களைத் தாங்களே போர் வீரர்களாகக் காட்டிக் கொள்ளும் வீரர்கள் முன்னேறிச் செல்வார்கள். அடிக்கடி வெளிநாடு பயணிக்கும் பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு 8 நாள் பயணத்தில் ஈடுபடுகிறார்.
நாட்டையே பதற வைக்கும் முக்கிய பிரச்சினைகளிலிருந்து பிரதமர் மோடி தப்பி ஓடுகிறார். குறிப்பாக மணிப்பூரின் மேலும் மேலும் மோசமாகும் நிலையைப் பற்றியும், மாநிலத்தில் உள்ள ‘இரட்டை எஞ்சின்’ அரசு சிக்கல்களை எதிர்கொண்டபோதிலும், பிரதமர் மோடி இதுவரை எந்தவிதமான கருத்தும் வெளியிடவில்லை.
பிரதமரின் முடிவுகள் காரணமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
பஹல்காம் சம்பவம் நிகழ்ந்து 70 நாட்களுக்கு ஆகியும் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தத் தவறியது” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைஜெய்ராம் ரமேஷ் முன்வைத்துள்ளார்.