இந்தியா

குடியரசுத் தலைவர் உரையின்போது செல்போனில் மூழ்கிய ராகுல்

webteam

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தியபோது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செல்போன் பயன்படுத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. முதல்நாள் இடைக்கால சபாநாயகர் எம்பி வீரேந்திர குமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்றைய தினம் புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. 

அதன்படி இன்றைய நிகழ்வாக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். விவசாயிகள், மகளிர், தொழிலாளர்களின் வளர்ச்சி, முத்தலாக் முறை உள்ளிட்ட பல முக்கியமான தலைப்புகளில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். 

அப்போது அங்கு அமர்ந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செல்போனை பயன்படுத்தியதாக புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தும் போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ராகுல்காந்தி தலையை குனிந்தபடி செல்போனை பயன்படுத்திக்கொண்டு இருந்தார். 

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பாஜகவைச் சேர்ந்த ட்விட்டர் பக்கங்களில் ''மரியாதைக்குரிய குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்தும்போது ராகுல்காந்தி செல்போனில் பிசியாக இருக்கிறார்'' என்ற தலைப்பில் ராகுல் செல்போன் பயன்படுத்தும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் இறுதி பகுதியில் மோடி, ‘அந்த பப்ஜிவாலா இருக்கிறாரா?’ என்று கேட்கும் வசனமும் இணைக்கப்பட்டுள்ளது.