மீனாட்சி நடராஜன் எக்ஸ் தளம்
இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல் | ம.பி. காங். வேட்பாளர் மனு நிராகரிப்பு.. 3ஆவது நபரை நிறுத்திய பாஜக!

மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெல்லும்நிலை உள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மூன்று மாநிலங்களவை இடங்களில் ஒன்றிற்கான காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு. இன்று தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் ஆணையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் ஆறு ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெல்லும்நிலை உள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங். வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு இன்று நிராகரிக்கப்பட்டது. தெலங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக, தேர்தல் அதிகாரியால் இன்று நிராகரிக்கப்பட்டது. குற்ற வழக்கு பற்றிய விவரத்தை பிரமாணப் பத்திரத்தில் மீனாட்சி நடராஜன் மறைத்ததாக பாஜக ஆட்சேபனை தெரிவித்ததால் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

மனுக்களை பரிசீலித்த தேர்தல் அலுவலர், மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை நிராகரித்ததால் காங். போராட்டம் நடத்தி வருகிறது. மீனாட்சி நடராஜனின் வழக்கை எடுத்துரைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான குழுவினர் இந்தியத் தேர்தல் ஆணையத்தை சந்திக்க முயன்றனர். ஆனால், அக்குழுவினர் உள்ளே அனுமதிக்கப்படாததால், தலைவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், “எங்கள் வேட்பாளர் மீது முதல் தகவல் அறிக்கையோ, குற்றப்பத்திரிக்கையோ இல்லை. ஆனால் இது வேண்டுமென்றே செய்யப்பட்டது. நாங்கள் அவகாசம் கேட்டோம், விண்ணப்பம் தாக்கல் செய்ய இங்கு வந்தோம், அவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை, இந்தியத் தேர்தல் ஆணையம் எங்களைச் சந்திக்கவில்லை, நாங்கள் யாரிடம் புகார் அளிப்பது? நாங்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருந்த தொகுதியில், எங்கள் வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. எங்கள் பேச்சைக் கேட்க யாருமில்லை. நாங்கள் நீதிமன்றம் செல்வோம்... இதில் ஒரு சதி இருப்பதாக நாங்கள் உணர்கிறோம், இந்தியத் தேர்தல் ஆணையம் தான் விசாரிக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, பாஜக மூன்றாவதாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளதால் குதிரைப் பேரம் நடக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது. இதைத் தடுக்க ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவிலேயே இருப்பார்கள் எனத் தெரிகிறது