மோடி pt web
இந்தியா

அசாம் டு மணிப்பூர்| பிரதமர் மோடிக்கு விமான டிக்கெட் புக் செய்த காங்கிரஸ்!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடைபெறவிருக்கும் அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். இந்த பயணத்தின்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தையும் பார்வையிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

PT WEB

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடைபெறவிருக்கும் அஸ்ஸாமில் ரூ.5,450 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுக்குச் சென்றிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தையும் பார்வையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பவண் கேரா வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸின் இந்த கூர்மையான விமர்சனம், மணிப்பூரை மீண்டும் தேசிய கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பவண் கேரா தனது X பக்கத்தில், "தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு நீங்கள் எப்போதும் முன்னுரிமை கொடுப்பீர்கள் என்றாலும், வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூரை நீங்கள் கைவிடக்கூடாது என்றும் 2023 முதல் மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது, அது மீண்டும் எரிகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரண்டு மாநிலங்களும் அருகில் இருப்பதால் அதனை சுட்டிக்காட்டியுள்ள பவண் கேரா, ”மணிப்பூர் ஒரு மணிநேர பயண தூரத்தில் உள்ளது. தயவுசெய்து அங்கும் செல்லுங்கள். பிரதமர் அங்கிருப்பது மணிப்பூரில் உள்ள நமது மக்களுக்கு தைரியமளிக்கும். உங்கள் வேலையை எளிதாக்க, நாங்கள் கௌஹாத்தியிலிருந்து இம்பாலுக்கு விமானத்தை முன்பதிவு செய்துள்ளோம். நீங்கள் விமானத்தில் ஏற வேண்டும். உங்கள் எண் என்னிடம் இல்லாததால், உங்கள் விமான டிக்கெட்டை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். தயவுசெய்து அதைப் பயன்படுத்தி 'PM CARES' என்பதை (மக்களுக்கு ) சொல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.