சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்’ சுயசரிதை வெளியீட்டைச் சுற்றி இந்தியாவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மோடி, ஆர்.எஸ்.எஸ், சீனா குறித்த பகுதிகளை நீக்குமாறு பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா அழுத்தம் தந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. அசோக் கெலாட், கமல்நாத், கௌரவ் கோகோய் உள்ளிட்டோர் இதை ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல் என கூறி, ஏன் இந்தியப் பதிப்பகத்தில் மட்டும் தடைகள் என கேள்வி எழுப்புகின்றனர்.
சோனியா காந்தியின் சுயசரிதையில் இருந்து மோடி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சீனா குறித்த தகவல்களை நீக்குமாறு, பதிப்பகம் கோரியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
சோனியா காந்தியின் பிலாங்கிங் (Belonging) புத்தக சர்ச்சை விவகாரத்தில் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம், அரசாங்கத்தின் அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டதாகவும், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், கமல்நாத் மற்றும் கௌரவ் கோகோய் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். புத்தகத்தின் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாத மூல வடிவத்தை, அதன் சர்வதேச பதிப்பகமான ஆல்ஃபிரட் ஏ. நாப் உலகளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியப் பதிப்பகத்தில் மட்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது ஏன் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பரிந்துரைகளை வழங்குவது வழக்கமான பதிப்பக நடைமுறைதான் என்றும், பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. எனினும், ரகசியமான ஆசிரியர் உரையாடல்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அந்த புத்தகத்தில் சோனியா காந்தியின் திருமணம் முதல் ராஜீவ் காந்தியின் மரணம் வரையிலான அவரது பயணத்தை விவரிக்கும் என நாஃப் பதிப்பகம் தெரிவித்துள்ளது.