எடியூரப்பா பதவியேற்ற 7 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி
தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில்
மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 1.45 மணி முதல், விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி,
அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து வருகிறது. இதில் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர்
அபிஷேக் சிங்வி வாதாடும் போது, பதவியேற்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து வாதிட்ட பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘நடு இரவில் நான் எழுப்பப்பட்டேன். இந்த மனு
நள்ளிரவில் விசாரணைக்கு எடுத்திருக்கக் கூடாது. ஒருவர் பதவியேற்றுவிட்டால் வானம் இடிந்து விடுமா? காங்கிரஸ் மனு தாக்கல்
செய்திருப்பது இது ஜனநாயக வழிமுறைகளை நசுக்குவதற்கான முயற்சி. ஆளுநரின் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம்
மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம், ஆனால் அவரது கடமைகளை செய்வதில் இருந்து தடுக்க முடியாது. எடியூரப்பா முதலமைச்சர்
ஆகிய பிறகு வேண்டுமென்றால் அவரை நீக்குங்கள். ஆனால் நீங்கள் ஆளுநரை கேள்வி எழுப்ப முடியாது’ என்று வாதிட்டார்.
இதற்கிடையே பாஜக ஆட்சியமைத்தால் 7 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கத்தாயர் என மத்திய தலைமை வழக்கறிஞர்
கே.கே.வேணுகோபால் மற்றும் பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் தெரிவித்தனர்.