இந்தியா

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு குவிகிறது பாராட்டு!

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு குவிகிறது பாராட்டு!

webteam

எல்லை அருகே பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக் குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை யொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை இன்று வீசியுள்ளது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படை ஏறக்குறைய 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விமானப்படை வீரர்களுக்கு என் வணக்கம்” எனத் தெரிவித்துள்ளார். இதே போல டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘’இந்திய விமானப்படை விமானிகளை வணங்குகிறேன். அவர்கள் நம்மை பெருமை படுத்தியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். 

’நமது வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித் துள்ளார். 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உட்பட பல தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் பலர் இந்திய விமானப்படைக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.