சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடமும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைப் பேசியில் பேசியதாக கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேனுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இன்று காலை எங்களது கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் தற்போது மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து ஆலோசித்தோம்.
சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதுகுறித்து ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடன் சோனியா காந்தி பேசியுள்ளார். நாங்கள் இன்னும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.