ட்விட்டரில் இணைந்த எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர்
எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள மீரா குமார், சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார்.
அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்; மகிழ்ச்சியும், அமைதியும் அனைவரது வாழ்விலும் செழிக்கட்டும் என்று மீராகுமார், தனது முதல் ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் கட்சி இடையில் ட்விட்டரில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மீரா குமார் ட்விட்டரில் இணைந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டட்தொடரின் போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல்கள் குறித்து பேச முயன்றபோது சபாநாயகராக இருந்த மீராகுமார் குறுக்கீடு செய்வது போன்ற வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட சுஷ்மா, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரை மீரா குமார் எப்படி நடத்தினார் என்பதைப் பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் சபாநாயகர் பதவியில் இருந்து மீராகுமார் 2013ல் விடைபெறும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மீராகுமாரின் ரசிகை தாம் என்று சுஷ்மா கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.