நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் இருந்த சிலர் விஜய் தொடங்கிய தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தனர். மேலும் ஆட்சியில் பங்கு வழங்கவேண்டும் என்றும் காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டது. ஆனால் இதனை திமுக தலைமை ஏற்க மறுத்தது.
இந்தச் சூழலில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவானது. எனினும் ஆட்சியமைக்க அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக அணியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.
கூட்டணியில் இருந்த திமுக தலைமையைக்கூட சந்திக்காமல் காங்கிரஸ் எடுத்த இந்த முடிவு, திமுகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. திமுகவினர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த நிலையில், காங்கிரஸுக்கு எதிராக திமுக இளைஞரணி கூட்டணியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சூழலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேசிய அளவில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள I-N-D-I-A கூட்டணியில் திமுகவும் ஓர் அங்கமாக உள்ளது என்றும், மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணியில் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், தேசிய அளவில் I-N-D-I-A கூட்டணி தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தேசிய அளவில் திமுகவுடனும் மாநில அளவில் தவெகவுடனும் கூட்டணி தொடர்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் முயற்சியால் I-N-D-I-A கூட்டணியில் பாஜகவை எதிர்த்து திமுக மற்றும் தவெக ஆகிய இரண்டு கட்சிகள் இணையுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரம் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்கிறதா என்பது குறித்து திமுக பதிலளித்தால் மட்டுமே தெளிவான பதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது