கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அதிமுக பொது செயலாளர் சசிகலாவை பார்வையாளர்கள் சந்திப்பதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், விதிகள் மீறப்பட்டிருப்பதை கண்டறிந்ததாக தன்னார்வலர் நரசிம்ம மூர்த்தி கூறியுள்ளார். கைதிகளை காண 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது சாதாரண நடைமுறை என்ற நிலையில் சசிகலாவை 31 நாட்களில் 14 முறை பார்வையாளர்கள் சந்தித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். வரையறுக்கப்பட்ட கால அளவைத் தாண்டி சந்திப்பு நீண்டிருப்பதும் தகவல் உரிமை சட்டத்தில் தெரிய வந்திருப்பதாக நரசிம்ம மூர்த்தி கூறியுள்ளார்.
இந்த விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிய போவதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க போவதில்லை என கூறியுள்ள கர்நாடக சிறைத்துறை ஐஜி சத்யநாராயண ராவ், கர்நாடக சிறை விதிகள் படியே அதிகாரிகள் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.