டெல்லி திகார் சிறையில் சோதனை நடத்தச் சென்றபோது கைதிகளுக்கு காயம் ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி முத்துப்பாண்டி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் ஒன்று டெல்லி திகார் சிறை. பலத்த பாதுகாப்பில் ஆயிரக்கணக்கான கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். சிறையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி திகார் சிறையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி முத்துப்பாண்டி தலைமையிலான 52 பேர் அடங்கிய குழுவினர் சோதனையில் பங்கேற்றனர். அந்தச் சோதனையின் போது 6 ஆம் எண் சிறையில் வன்முறை ஏற்பட்டதில் 18 கைதிகள் காயமடைந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சின்மய் கனோஜியா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் சோதனையின் போது ஏற்பட்ட வன்முறையில் 18 கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது. அது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கை மூலம் உறுதியும் செய்யப்பட்டது. எனவே சோதனைக்கு தலைமையேற்ற சிறப்பு அதிகாரி முத்துப்பாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கனோஜியா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அதனை அமல்படுத்தும்படி டெல்லி காவல்துறை கண்காணிப்பாளருக்கு, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.