செய்தியாளர்: ஸ்ரீதர்
புதுச்சேரி பூமியான்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் (47). இவருக்கு சிவபிரகாஷ், சூரியமூர்த்தி என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருள் பாண்டி என்ற அருள் விஜய் என்பவர் தனது ஆதரவாளர்களான அருள் குமார், சாரங்கபாணி, முரளி, சஞ்சய், ரவி, சர்வின், விஜய பாரதி, கணேஷ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோருடன் சிவபிரகாஷ் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
அங்கு வீட்டில் இருந்த அவரது தம்பி சூரியமூர்த்தி, தந்தை சிவபெருமாள் ஆகியோரை சரமாரியாக தாக்கி அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து, காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ரோட்டில் வீசி சேதப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து சிவபிரகாஷ் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த சிவபிரகாஷ் மற்றும் அவரது தம்பி ஆகியோர் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டினுள் புகுந்து தாக்கிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக அவர்களது தந்தை சிவபெருமாள் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சகோதரர்கள் தொடர்ந்து சில நலத்திட்ட உதவிகள் செய்து வந்ததும் அதற்கு பேனர்கள் இடையூறாக வைத்த விவகாரத்தில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து சிவபிரகாஷ் தரப்பினர் அருள் விஜய் தரப்பினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் மீது போஸ்டர் ஒட்டியதால் ஆத்திரம் அடைந்த தவெக நிர்வாகி அருள் விஜய் தனது ஆதரவாளர்களுடன் சிவபிரகாஷ் வீடு புகுந்து தாக்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அருள் விஜய் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.