தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (ஜன.28) காலை விமான விபத்தின்போது உயிரிழந்தார். இந்த விமான விபத்து தொடர்பாக எந்தக் காரணமும் இதுவரை வெளியாகவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமான விபத்து குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் இன்று (ஜன.28) காலை விமான விபத்தின்போது உயிரிழந்தார். உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புனேயில் இருந்து அவர் பாராமதிக்கு இன்று காலை தனி விமானத்தில் சென்றார். அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, ஓர் உதவியாளர், விமானி-இன்-கமாண்ட் மற்றும் முதல் அதிகாரி என 5 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த விமான விபத்து தொடர்பாக உறுதியாக எந்தக் காரணமும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில், பாராமதி விமான நிலையத்தில் அடர்த்தியான மூடுபனி மற்றும் குறைந்த தெரிவுநிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் பவாரின் உடலே அவரது கடிகாரம் மற்றும் ஆடைகளை வைத்தே அடையாளம் காணப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமான விபத்து குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, ”விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், ”அஜித் பவார் பயணம் செய்த பாம்பார்டியர் லியர்ஜெட் 45 என்ற விமானம் 100% பாதுகாப்பானது” என VSR வென்ச்சர்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்தியா டுடே ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள VSR உயர் அதிகாரியான விஜய் குமார் சிங், ”விமானம் 100% பாதுகாப்பானது. இதை இயக்கும் குழுவினர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். விபத்துக்கு மோசமான தெரிவுநிலை ஒரு காரணியாக இருக்கலாம். இருப்பினும் இறுதி முடிவு DGCA விசாரணையிலிருந்தே தெரிய வரும். எனினும், நிறுவனத்திற்கு இது மிகவும் கடினமான தருணம்” என தெரிவித்துள்ள அவர், இந்த விபத்தில் சுமித் கபூர் மற்றும் சாம்பவி பதக் என்கிற இரண்டு விமானிகள் இறந்திருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்துக்குள்ளான பாம்பார்டியர் லியர்ஜெட் 45 விமானம், VSRஆல் இயக்கப்படும் பெரிய விமானக் குழுவின் ஒரு பகுதியாகும். VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், புதுடெல்லியை தளமாகக் கொண்டது மற்றும் ஆகஸ்ட் 2011இல் நிறுவப்பட்டது. இதன் சீரியல் எண் 45-417. இது 17 விமானங்களை இயக்குகிறது. இது, VT-SSK என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த நிறுவனம் முதன்மையாக விஜய் குமார் சிங் மற்றும் ரோஹித் சிங் ஆகியோரால் இயக்கப்படுகிறது. இவ்வகை விமானம் வணிக மற்றும் மருத்துவச் சேவைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படுகிறது.
விமான நிறுவனத்தின் தகவல்களின்படி, VSR 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட விமானிகளைப் பணியமர்த்துகிறது. 99% வாடிக்கையாளர் திருப்தி விகிதத்தைக் கொண்டுள்ளது. இது புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் போபாலில் இருந்து செயல்படுகிறது. இதற்கு முன், இவ்வகையான விமானம் கடந்த 2023ஆம் தேதி, செப்டம்பர் 14 அன்று மும்பை விமான நிலையத்தில் கடுமையான விபத்தில் சிக்கியது. அந்த விபத்தின்போது எட்டு பயணிகளும் உயிர் தப்பினர், இருப்பினும் பலர் காயமடைந்தனர்.