இந்தியா

மாநிலங்களுக்கு தடுப்பூசி தர நிறுவனங்கள் மறுப்பு: என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

மாநிலங்களுக்கு தடுப்பூசி தர நிறுவனங்கள் மறுப்பு: என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

Veeramani

உலகளாவிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நேரடியாக மத்திய அரசாங்கத்துக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்குவோம் என்று தெரிவித்த நிலையில்,  மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் கோரிக்கை வைத்துள்ளன.

கடந்த வாரம் மாடர்னா நிறுவனம் தடுப்பூசிகளை நேரடியாக மாநிலங்களுக்கு வழங்கமாட்டோம் என பஞ்சாப் அரசுக்கு தெரிவித்தனர். அதுபோல பைசர் மற்றும் மாடர்னா  நிறுவனங்கள் மத்திய அரசுடன் மட்டுமே தொடர்புகொள்வோம் என தெரிவித்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  தெரிவித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தடுப்பூசிகளுக்கான மாநில வாரியான கோரிக்கையை மதிப்பிட்டு உலகளாவிய டெண்டரை மத்திய அரசு ஒருங்கிணைக்க வேண்டும். இது மாநிலங்கள் போட்டியிடுவதிலிருந்தும், தடுப்பூசி விலையை அதிகரிப்பதிலிருந்தும் தடுக்கும். மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கவேண்டும்எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள், மற்றும் பிரஹன் மும்பை மாநகராட்சி , சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்களும் தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டர்களை வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மத்திய அரசின் மோசமான திட்டமிடல் குறித்து கடுமையாக சாடினார். "இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசிகள் வாங்கும்போது எங்கள் கொள்முதல் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது தனியார் நிறுவனங்களிடமிருந்து நாம் எவ்வளவு தடுப்பூசிகளை பெறலாம் என்பதையும் மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. சர்வதேச உற்பத்தியாளர்கள் தாங்கள் மத்திய அரசுடன் மட்டுமே பேசுவதாகக் கூறுகிறார்கள். இது மிகவும் தீவிரமான நோய்த்தொற்று காலம் என்பதால் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்  ”என்றார்.