இந்தியா

'Work From Home' - அதிக வேலைப்பளுவால் நொந்து போகும் ஊழியர்கள்!!

webteam

சீனாவில் ஒலிக்கத்தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை வெகு சீக்கிரமே இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. தொட்டாலே தொற்றிவிடும் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் 144 தடையை அறிவித்தார் பிரதமர். போக்குவரத்து ஏதும் இல்லை, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நாடும் கடைகள் அல்லாத மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.  பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என அறிவுறுத்தின.

இதற்காக அலுவலகத்தில் இருந்த கணினிகளை அப்படியே தூக்கிக் கொண்டு வீட்டில் வைத்துவிட்டு சென்ற நிறுவனங்களும் உண்டு. ஆகா, வீட்டில் இருந்து வேலை. ஜாலி தான். அவசரம் அவசரமாக கிளம்பத் தேவை இல்லை. குடும்பத்தோடு நேரம் செலவழித்துக்கொண்டே அலுவலக வேலை என்றால் சொல்லவா வேண்டும் என்றும் கனவு கண்டவர்கள் எல்லாம் தற்போது புலம்பித் தவிக்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அலுவலகமே சென்று விடலாம் போல என்கின்றனர் பல ஊழியர்கள். இது குறித்து தி நியூஸ் மினிட் பல ஊழியர்களின் அனுபவங்களை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் காலை 9 மணிக்கு வேலையை தொடங்கினால், சில நாட்கள் இரவு கூட ஆகிவிடுகிறது. வார இறுதி நாட்களிலும் வேலை செய்கிறோம். நாங்கள் அலுவலகம் போனபோது கூட இப்படி வேலை பார்த்தது இல்லை என ஆதங்கத்தை ஊழியர் ஒருவர் கொட்டித்தீர்த்துள்ளார். மேலும், இடைவேளை என்பதே இல்லாமல் போகிறது. சாப்பாட்டிற்காக செல்லும் இடைவேளைகள் கூட பரபரப்பாகவே இருக்கிறது. வீட்டு வேலைகள் செய்வதே கடினமாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கும் அலுவலகம் சென்று வேலை பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. வீட்டில் வேலை பார்க்கும் போது அதிக பொறுப்புகள் இருக்கும். அலுவலக வேலை நேரம் என்று தட்டிக்கழிக்க முடியாத பொறுப்புகள் பல உண்டு. கொரோனாவால் வேலை ஆட்களுக்கும் விடுமுறை விடப்பட்ட நிலையில் அலுவலக வேலைக்கே நேரம் போய்விடுகிறது எனப் பலர் புலம்புகின்றனர்.

தன்னுடைய நிலை குறித்து தெரிவித்துள்ள வங்கி ஊழியர் ஒருவர், 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டி உள்ளது. எனக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர்களுக்கு உணவு ஆர்டர் செய்து கொடுக்கிறேன். கொரோனா அச்சத்தில் இப்படி உணவு ஆர்டர் செய்வது எனக்கு பயமாக இருக்கிறது. வீட்டில் வேலை பார்க்கும் போது வீட்டு பொறுப்புகள் அதிகம் இருக்கும் என மேலதிகாரிகளுக்கு தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்து வேலை பார்த்தால் ஓய்வு எடுக்கலாம். வேலைப்பளு குறைவாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் உண்மைக்கதை வேறு மாதிரி இருக்கிறது. நினைத்ததற்கு எதிராக இருக்கிறது என தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார் ஊழியர் ஒருவர்.