இந்தியா

'மாஸ் பொதுக்கூட்டம்'.. இளைஞர்களே அதிகம்... - மேற்கு வங்கத்தில் கெத்து காட்டிய கம்யூ.-காங்.

'மாஸ் பொதுக்கூட்டம்'.. இளைஞர்களே அதிகம்... - மேற்கு வங்கத்தில் கெத்து காட்டிய கம்யூ.-காங்.

webteam

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானம் ஏராளமான வரலாற்று பொதுக்கூட்டங்களுக்கு சாட்சியாக இருந்த மைதானம். இதே மைதானம் நேற்று மற்றொரு வரலாற்று பொதுக்கூட்டத்தை சந்தித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இதை ஒரு புதிய அத்தியாயம் வெளிவந்தது எனலாம்.

மார்ச் 27 முதல் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தங்கள் முதல் கூட்டு பொதுக் கூட்டத்தை இங்கு நடத்தியது. இரு கட்சிகளும் இதற்கு முன்பு ஒன்றாக கூட்டணியாக போட்டியிட்ட போதிலும், இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தையோ, பேரணிகளையோ அவர்கள் ஒன்றாக நடத்தவில்லை. அந்த அளவுக்கு இந்தப் பொதுக்கூட்டம் பேசுபொருளாகி உள்ளது.

பொதுக்கூட்டத்தில் மொத்தம் 2 முதல் 2.5 லட்சம் வரையிலான மக்கள் பங்கேற்று இருந்தார்கள் என சொல்லப்படுகிறது. எனினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி "மைதானத்தில் கூடியிருந்தவர்கள் 10 லட்சத்துக்கும் அதிகமானோர்" என்றார். இவ்வளவு பெரிய கூட்டம், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் மட்டுமே சாத்தியப்பட்டுவிடவில்லை. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் உடன் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்) எனப்படும் ஃபுர்ஃபுரா ஷெரீப்பின் செல்வாக்கு மிக்க மதகுரு அப்பாஸ் சித்திகியின் கட்சி தொண்டர்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் ஒரு பெரிய அணிதிரட்டலாக உருவெடுத்து, பொதுக்கூட்டத்தை மாஸ் காட்ட வைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், என்னவென்றால், இந்த ஐ.எஸ்.எஃப் கட்சியின் வயது வெறும் 38 நாள்கள். ஆம், 38 நாட்கள் முன்பு தான் அந்தக் கட்சி உருவானது.

மேற்கு வங்கத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து மூன்று கட்சியின் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்துக்கு படையெடுத்து வந்திருந்தனர். குறிப்பாக, இளைஞர்கள் இந்தக் கூட்டத்தில் அதிக அளவில் கலந்துகொண்டனர். அதிலும், இஸ்லாமிய மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட அப்பாஸ் சித்திகி ஆதரவாக ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் பொதுக்கூட்டத்தை நோக்கி படையெடுத்தனர். சித்திகியின் ஆதரவாளர்களில் பெரும்பாலோர் 18 முதல் 27 வரையிலான வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இதனால் இந்தப் பொதுக்கூட்டத்தில் இளைஞர்கள் அதிகளவு பங்கேற்று இருந்ததை காண முடிந்தது.

இதற்கிடையே, கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, ``தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவால் ஏராளமான பணம் திரட்டப்படுகிறது. இது அரசியலில் வணிகத்துக்கு வழிவகுக்கிறது. இங்கே, திரிணாமுல் காங்கிரஸ் நாரதா, சாரதா போன்ற நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த இரு தீய சக்திகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். கொள்ளையடிக்கும் எந்த அரசாங்கமும் தேவை இல்லை, சாதி அடிப்படையில் பிளவுபடும் அரசாங்கமும் தேவை இல்லை. மேற்கு வங்க மக்கள் சார்பு அரசாங்கத்தை விரும்புகிறார்கள்" என்றார்.

மேற்கு வங்க சிபிஐ (எம்) செயலாளர் பிமான் போஸ் கூறுகையில், ``காங்கிரஸ், ஐ.எஸ்.எஃப் மற்றும் பிற இடது கட்சிகள் எங்களுடன் இருப்பதால் இன்றைய சந்திப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. பிரிகேட் பரேட் மைதானம் இதுபோன்ற பேரணியை பார்த்ததில்லை. இந்தத் தேர்தலில் பாஜகவும், திரிணாமுலும் ஒருபக்கம், நாங்கள் அனைவரும் ஒன்றாக மறுபுறம் இருக்கிறோம்" என்றார்.

இதற்கிடையே, நேற்று நடந்த பொதுக்கூட்டம் மற்றும் பேரணி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு ஒரு "மூன்றாவது மாற்று சக்தியாக" தன்னை முன்னிலைப்படுத்தியது கவனிக்கத்தக்கது.

- மலையரசு