இந்தியா

நேரடி வரிக்கான புதிய அறிக்கை நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைப்பு 

webteam

வருமான வரிச் சட்டத்தை மாற்றும் நேரடி வரி விதி (Direct Tax Code) தொடர்பான அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அக்குழு சமர்ப்பித்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சி காலத்தில் வருமான வரிச் சட்டத்தை மாற்றியமைக்க நேரடி வரி விதியை அமைக்க திட்டமிடப்பட்டது. ஏனென்றால் தற்போது அமலிலுள்ள வருமான வரிச் சட்டம் 1961ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆகவே தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு இச்சட்டத்தை மாற்றியமைக்க மோடி அரசு திட்டமிட்டது. 

இதற்காக அரபிந்த் மோடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு நேரடி வரிகளை பொருளாதார சூழல் மற்றும் பிற உலகநாடுகளில் இருக்கும் நேரடி வரி முறை ஆகியவற்றை ஆராய்ந்து புதிய விதியை உருவாக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தக் குழு தனது அறிக்கையை தயாரித்து வந்தது. இந்தக் குழுவின் தலைவர் அரபிந்த மோடி கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றதால், புதிய தலைவராக அகிலேஷ் ரஞ்சன் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்தக் குழு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரடி வரிகளுக்கான விதி (Direct Tax Code) தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த விதிகளை அரசு ஆராய்ந்து வருமான வரிச் சட்டம் 1961க்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.