ஆந்திராவில், நீதித்துறைக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துகளை பதிவிடுவோர் மீது சிபிஐ விசாரணை நடத்த அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகள் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிபதிகள் ராகேஷ் குமார் மற்றும் ஜெ. உமா தேவி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆந்திராவில் ஏப்ரல் மாதம் முதல், நீதித்துறைக்கு எதிராக சமூகவலைத்தளங்களிலும், மின்னணு ஊடகங்களிலும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருவதாக நீதிபதிகள் கூறினர்.
இந்த பதிவுகள் தொடர்பாக ஆந்திர காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஆந்திர சட்டப்பேரவைத் தலைவரும், துணை முதல்வரும்கூட நீதித்துறைக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலும், சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட பதிவுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும், அதன் அறிக்கையை 8 வாரங்களுக்குள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
சிபிஐ-யின் விசாரணைக்கு ஆந்திர மாநில தலைமைச் செயலரும், காவல்துறை டிஜிபியும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். முன்னதாக, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது அரசைக் கவிழ்க்க உயர் நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது என்றும் இதற்கான ஆதாரம் உள்ளது எனவும் ஜெகன் மோகன் ரெட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.