delhi pt
இந்தியா

வகுப்பறையில் மாட்டுச்சாணத்தை பூசிய கல்லூரி முதல்வர்... சொன்ன காரணம் என்ன? #Video

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அதற்கான விளக்கத்தை கொடுத்தார் கல்லூரியின் முதல்வர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

டெல்லி வகுப்பறை சுவர்களை மாட்டுச்சாணம் கொண்டு பூசிய கல்லூரி முதல்வருக்கு கண்டனங்கள் வலுத்துள்ளனர். அவர் இப்படி செய்ததன் காரணம் என்ன? பார்க்கலாம்.

டெல்லியில் உள்ள லட்சுமிபாய் கல்லூரியில் கடந்த 13 ஆம் தேதி எடுக்கப்பட்ட 35 வினாடிகளை கொண்ட வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்கல்லூரியின் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, வகுப்பறை ஒன்றின் சுவர் முழுவதும் மாட்டுசாணத்தை பூசினார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இப்படி செய்ததற்கான காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், வகுப்பறையை இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.

மேலும், இதுகுறித்து தெரிவித்த அவர், “ பாரம்பரிய இந்திய அறிவைப் பயன்படுத்தி வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு” (Study of Heat Stress Control by Using Traditional Indian Knowledge) என்கிற தலைப்பில் இந்த திட்டம் தற்போது சோதனை முயற்சியில் உள்ளது.

ஒரு வாரத்திற்குப் பிறகே முழு ஆராய்ச்சியின் விவரங்களையும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியும். இயற்கையான சாணத்தைக் கைகளால் தொடுவதில் எந்தத் தீங்கும் இல்லை என்பதால் அதனை நானே என் கைகளால் பூசினேன். சிலர் முழு விவரங்களையும் தெரியாமல் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கல்லூரி முதல்வரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு தலைவர் ரோனக் காத்ரி, மாணவர்களிடம் கருத்து கேட்காமல் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதுபோன்ற பரிசோதனைகளை அவரது வீட்டில் மேற்கொள்ளட்டும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கூடுதலாக, வெப்பத்தை கட்டுக்குள் கொண்டுவர மாட்டுச்சாணத்தை பூசுவது இதுமுதல்முறை அல்ல. இதே போல, கடந்த 2023 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் மருத்துவர் ஒருவர் தனது காரில் மாட்டுச்சாணத்தை பூசியது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு சேஜல் ஷா என்றவரும் இதே போல தனது காரில் சாணத்தை பூசியது குறிப்பிடத்தக்கது.