இந்தியா

தொடரும் கனமழை: கொச்சி விமான நிலையம் மூடல்

webteam

கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. மக்களின் இயல்வு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, இயல்பை விட 6 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொச்சி விமான நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் இன்று காலை வரை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் விமானங்கள் நிறுத்துமிடத்தில் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. இதனால், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.