இந்தியா

நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் மது கோடா குற்றவாளி: சிபிஐ நீதிமன்றம்

webteam

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மது கோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி.குப்தா உள்ளிட்ட ஆறு பேர் குற்றவாளிகள் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை வெளியிடப்படும் என்று நீதிபதி பரத் பராஷர் தெரிவித்துள்ளார். தீர்ப்பையொட்டி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

முன்னதாக, ஜார்கண்ட் மாநிலம் ரஜரா என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை கொல்கத்தாவைச் சேர்ந்த விசுல் என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் மது கோடா, ஹெச்.சி.குப்தா, அரசு ஊழியர்கள் பசந்த் குமார் பட்டாச்சார்யா, பிபின் பிகாரி சிங், விசுல் நிறுவன இயக்குநர் வைபவ் துள்ஸ்யன், மதுகோடாவிற்கு நெருக்கமான விஜய் ஜோஷி மற்றும் பட்டயக் கணக்காளர் நவின் குமார் துள்ஸ்யன் ஆகிய ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.