கும்பமேளா, ரயில் எக்ஸ் தளம்
இந்தியா

உ.பி. கும்பமேளா | 10 மெமு ரயில்களில் பெட்டிகள் குறைப்பு!

கும்பமேளா சிறப்பு ரயில்களுக்கு தேவைப்படுவதால் 10 மெமு ரயில்களில் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள திரிவேணி சங்கமத்தில் அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 வரை மஹா கும்பமேளா நடைபெறவுள்ளது. தேசத்தின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கும்பமேளாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு ரயில்களுக்காக அதிகளவுகள் ரயில் பெட்டிகள் தேவைப்படுகின்றன. அதனால், நாட்டின் பல பகுதிகளிலும் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து கும்பமேள சிறப்பு ரயில்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலுள்ள 10 மெமு ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை தற்காலிகமாக குறைத்து இயக்கப்படுகின்றன.

முன்னதாக, கும்பமேளாவிற்குச் செல்ல வசதியாக ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படாது என சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டன. இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் எனக் குறிப்பிட்ட இந்திய ரயில்வே, கும்பமேளாவிற்காக இலவசமாக ரயில்களில் பயணிக்கலாம் என ஒருபோதும் அறிவிக்கவில்லை என விளக்கமளித்தது.