இந்தியா

“கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்” - பினராயி விஜயன் கோரிக்கை

“கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்” - பினராயி விஜயன் கோரிக்கை

rajakannan

கேரளாவில் மீட்பு பணிகளுக்கு கூடுதலாக ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் வழங்குமாறு பிரதமரிடம் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. 

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், 10 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் கடந்த 8ஆம் தேதி முதல் கனமழை பெய்துவருகிறது. இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முப்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் தத்தளிப்பவர்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். உணவு குடிநீரின்றி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரளாவுக்கு வந்தார். கேரள ஆளுநர் சதாசிவம் அவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வரவேற்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இன்று காலை பார்வையிட்டார். பின்னர், மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதல்மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடியுடன் ஹெலிகாப்டரில் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மீட்பு பணிகளுக்கு கூடுதலாக ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவற்றை அளிப்பதாக மோடி உறுதி அளித்ததாகவும் கூறினார். 

இதுதொடர்பாக கேரள முதல்வர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், “பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கேரளாவின் வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கேரளாவில் ரூ19 ஆயிரத்து 512 கோடி அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரதமரிடம் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். பிரதமர் மோடி ரூ.500 கோடி முதற்கட்ட நிவாரணத் தொகையாக அளிக்கப்படும் என்று அறிவித்தார். அப்போது, முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ2000 கோடியை அளிக்க வேண்டுமென முதலமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அரசு அளித்துள்ள உதவிக்கு நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.