ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது அமைச்சரவையை மறுசீரமைத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த நான்கு மூத்த தலைவர்களை அமைச்சர்களாக நியமித்துள்ளார். ஜம்மு சமவெளியின் ஒரே அமைச்சரான சதீஷ் சர்மா விடுவிக்கப்பட்டதால், அந்த பகுதி பிரதிநிதித்துவம் இழந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது அமைச்சரவையை விரிவுபடுத்தி மறுசீரமைத்துள்ளார். இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் நான்கு மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், ஜம்மு சமவெளிப் பகுதியின் ஒரே அமைச்சரான சதீஷ் சர்மா அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா புதிய அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
யூனியன் பிரதேச விதிகளின்படி, ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவையின் மொத்த இடங்களில் 10 சதவீதம் மட்டுமே அதாவது முதல்வர் உட்பட அதிகபட்சம் 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும்.
அந்த வகையில் அலி முகமது சாகர், ஷமீம் பிர்தோஸ், மிர் சைஃபுல்லா மற்றும் அல்தாஃப் அஹ்மத் வானி ஆகிய நால்வர் புதிதாகப் பதவியேற்றுள்ளதால், அமைச்சரவையில் முதல்வர் உட்பட 7 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்தும், துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி மற்றும் ஜாவேத் ராணா ஆகிய இருவர் ஜம்முவின் பிர் பஞ்சால் பிராந்தியத்திலிருந்தும் தேர்வாகியுள்ளனர்.
அதேவேளையில் சுயேட்சை எம்எல்ஏ சபாஷ் ஷர்மா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாஜகவுக்கு அதிக வாக்கு வங்கி உள்ள ஜம்மு, உதம்பூர், சம்பா மற்றும் கத்துவா சமவெளி மாவட்டங்களுக்கு தற்போது அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது.
2024 தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வென்ற 42 இடங்களில் 35 இடங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தவை. பலமுறை தொடர்ந்து வெற்றிபெற்ற மூத்த தலைவர்கள் அமைச்சரவைக்கு வெளியே காத்திருந்த நிலையில், சுயேச்சைக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது கட்சி சீனியர்களிடையே நீண்ட நாட்களாக அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
மேலும் அனுபவம் வாய்ந்த நசீர் அஹ்மத் கான் குரேசி, முபாரக் குல் போன்ற தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதால் கட்சிக்குள் உட்கட்சி பூசலும் வெடித்துள்ளது.