ஆந்திராவில் 5 பேரை துணை முதல்வர்களாக நியமிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜெகன்மோகன் ரெட்டி 5 பேரை துணை முதலமைச்சர்களாக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார். அத்துடன் 25 கேபினேட் அமைச்சர்களையும் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளார். இவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள். ஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெகன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசு திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரவே 5 துணை முதல்வர்கள் தேர்ந்தெடுத்ததாகவும் ஜெகன் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.