பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் முன்பு பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பகுதிகள் புதிய வெள்ள அபாய மண்டலங்களாக உருவெடுத்துள்ளதாக ஐஐடி காந்திநகர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் காரணமாக திடீர் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் எவை என்பதில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆய்வு, 2001 முதல் 2020 வரையிலான தரவுகளை 1981-2000ஆம் காலகட்டத்துடன் ஒப்பிட்டுள்ளது. அதன்படி, முன்பு வெள்ள அபாயம் இல்லாத இந்திய நதிப் படுகைகள் அனைத்திலும் கனமழைப் பொழிவு நேரம் கணிசமாக அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் கனமழை காரணமாகவே திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. திடீர் வெள்ள பாதிப்பு இல்லாத துணைப் படுகைகளாக கருதப்பட்ட பகுதிகளில் கனமழைபொழிவு மற்றும் நீரோட்டம அதிகரித்துள்ள பகுதிகளின் விகிதம் 51 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேபோல் திடீர் வெள்ள ஆபத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் மழைப்பொழிவு நேரம் 50.3 விழுக்காட்டிலிருந்து 48 விழுக்காடாகக் குறைந்துள்ளது. திடீர் வெள்ளம் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 5000 பேர் உயிரிழப்பதாக தேசிய பேரிடர் மேலாணமை வாரியம் கூறுகிறது.