உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் (Bulandshahr) பகுதியில் காணாமல் போன 12ஆம் வகுப்பு மாணவி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் டியூசனுக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது காணாமல் போன சிறுமி என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அந்த மாணவி கடத்தப்பட்ட வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த மாணவிக்கு அருகில் ஒரு கார் நிற்கிறது. காரில் இருந்த நபர்களால் அந்த மாணவி கடத்தப்படும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், அந்த மாணவி கழுத்து நெறித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவியின் ஆடைகள் களைந்திருப்பதை பார்க்கும்போது அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என தெரிகிறது. இந்த வழக்கில் தற்போது சந்தேகத்தின் பேரில் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.