பஞ்சாப் மத்தியச் சிறையில் கைதிகள் மற்றும் காவல்துறையினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர்.
பஞ்சாப்பின் லுதியானா மத்தியச் சிறையில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று வழக்கம்போல் சிறை இயங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் சிறை பரபரப்பான சூழலை அடைய, உடனே சிறைக்காவலர்கள் ஓடிவந்து சண்டையை கட்டுப்படுத்த முயன்றனர். அதற்குள் சண்டை முற்றி கலவரமாக மாறியது.
இந்த நிலையை கட்டுக்குள் கொண்டு வர, காவலர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் காவல்துறையினரை தாக்கினர். கைதிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் வெடித்தது. பின்னர் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு அனைத்து கைதிகளும் சிறைக்குள் அடைக்கப்பட்டனர். அப்போது 4 கைதிகள் தப்பி ஓட முயன்றனர். பின்னர் அவர்களையும் காவல்துறையினர் விரட்டிப்பிடித்து சிறையில் அடைத்தனர். இந்த மோதலில் 6 கைதிகள் மற்றும் 4 சிறைக்காவலர்கள் காயமடைந்துள்ளனர்.