இந்தியா

டெல்லி மேயர் தேர்தல்: ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட ஆம் ஆத்மி - பாஜக கவுன்சிலர்கள்!

webteam

டெல்லியில் இன்று நடைபெற மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
 
கடந்த டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. 15 ஆண்டுகால பாஜகவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சி தேர்தலில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது

இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் இன்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து. அவை தொடங்கிய பிறகு , துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட 10 நியமன உறுப்பினர்களின் பதவியேற்புக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஜக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி, இருதரப்பு கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.