கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் கருத்து வேறுபாடு காரணமாக மும்பைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. இதனால் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மும்பைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில எம்எல்ஏக்களோ சென்னை வந்துள்ளனர். இதனால் ஆட்சிக்கு பிரச்னை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே எம்எல்ஏகளுக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சலசலப்பு நிறைந்த அரசியல் சூழலில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையை சந்தித்து சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்பின் பேசிய சித்தராமையா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். கட்சிக்குள் உள்கட்சி பூசல் எதுவுமில்லை என தெரிவித்தார்.